அனைவருக்கும் நவராத்ரி நல்வாழ்த்துக்கள் 2020 !!

Author : Arulmathi
- நவராத்திரி என்றால் என்ன ?
- கொலு எப்போது ஆரம்பிக்க வேண்டும்?
- நவராத்திரி கலசம் எப்படி வைப்பது ?
- கொலு எவ்வாறு வைப்பது?
- ஒன்பது படிகளில் என்னென்ன பொம்மைகளை அடுக்கலாம் ?
- கொலு வைக்க எவ்வளவு செலவாகும் ? பட்ஜெட் கொலு :
- நவராத்திரிக்கு என்ன என்ன பொம்மைகள் வாங்கலாம்?
- என்னென்ன கொலு பொம்மைகள் மிகவும் பிரசித்தம்?
- இந்த வருட புதுவரவுகள் 2020
- நவராத்திரி சுண்டல் இனிப்பு வகைகள்?
- நவகிரகங்களுக்கு உரிய தானியங்கள் அல்லது முளைப்பாரி:
- நவராத்திரி ஐடியாக்கள்?!
- நவராத்ரி விளையாட்டுகள் – போட்டிகள்
- நவராத்திரியின் போது என்ன செய்ய வேண்டும் ?
- நவராத்திரியை எப்படி முடிப்பது ?
- கொலுவில் மண் பொம்மைகள் தான் வைக்க வேண்டுமா ?
- கொலு பொம்மைகளை எங்கு வாங்குவது ?
- கொலு பொம்மைகளை எவ்வாறு பராமரிப்பது ?
- உடைந்து விட்ட பொம்மைகளை பயன்படுத்தலாமா ?
நவராத்திரி என்றால் என்ன?
நவராத்ரி இந்துக்களின் பண்டிகை , பெண்களின் பண்டிகை, பெண்மையையும் நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றும் ஒரு விழா. இதை அனைவரும் செய்யலாம். ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.
ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரி வந்தாலும் தசரா மற்றும் ஆயுதபூஜை ஒட்டி வருகிற நவராத்ரி அன்றுதான் கொலு வைக்கப்படுகிறது.
கொலு எப்போது ஆரம்பிக்க வேண்டும்?
மகாலய அமாவாசை அன்று படிகளை அமைக்க வேண்டும். அந்த நேரம்தான் துர்க்கை வானுலகில் இருந்து பூமிக்கு இறங்கி வருவதாக ஐதீகம்.
மகாலய அமாவாசை அன்றே நீங்கள் கலசத்தைத் தயார் செய்ய வேண்டும்.
நவராத்திரி கலசம் எப்படி வைப்பது ?
வெள்ளியிலும் வெண்கலத்தில் அல்லது உங்களிடம் உள்ள ஒரு செம்பில் அரிசி, துவரம்பருப்பை கழுத்து வரையில் நிரப்பிவிட்டு அதற்குமேல் மாவிலைகள் வட்டமாக வைத்து மஞ்சள் பூசிய தேங்காயையும் அல்லது மஞ்சளையும் கோபுரம் போல் செய்து வைக்கலாம். அரிசி பருப்பு இவற்றோடு நீங்கள் காசுகளையும் கலசத்தின் உள்ளே போடலாம்.
கலசத்திற்கு சந்தனம் குங்குமம் இட்டு வீட்டில் நகைகள் இருந்தால் அதைக் கொண்டு அலங்கரிக்கலாம். சிலர் கலசத்திற்கு புதுத்துணி மஞ்சள் கயிறு வளையல் போன்றவற்றையும் அணிவித்து வைப்பார்கள்.
ஒரு சில இடங்களில் கலசத்தில் தண்ணீர் நிரப்பி அதில் சிறிது மஞ்சள் ஏலக்காய் பச்சைக் கற்பூரம் தண்ணீர் கெடாமல் இருக்க போட்டு வைப்பார்கள். இந்த கலசம் உயிரின் ஊற்றாகவும் தாயின் வடிவமாகவும் அம்பாளின் அம்சமாகவும் கருதப்படுவதால் நவராத்திரியில் இந்த கலசம் மிகவும் முக்கியம்.
நவராத்திரி முடிந்தவுடன் இந்தக் கலசத்தில் இருக்கும் அரிசி, பருப்பை பொங்கல் செய்து சாப்பிடடலாம் . நீர்க்கலசம் என்றால் அந்த நீரை முளைப்பாரியிலோ, அல்லது தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு ஊற்றலாம்.
கொலு எவ்வாறு வைப்பது?
- கொலு ஒன்பது படிகள் வைத்து வைக்கப்படும். ஒற்றைப்படையில் 3, 5, 7 படிகள் வைத்து கொலு வைக்கலாம்.
- கொலு படிகளை ஒரு சுவற்றின் மீது சாய்ந்து இருக்குமாறு வைப்பது நல்லது கொலு பொம்மைகள் கிழக்குப் பக்கமோ அல்லது வடக்கு பக்கம் பார்த்து உள்ளபடி வைக்கலாம்.
- கொலு படிகள் மீது நீங்கள் உபயோகிக்காத புதிய ஒரு துணியை வேஷ்டி அல்லது சேலை அல்லது அலங்காரமான துணிகளும் உபயோகிக்கலாம்.
- வெள்ளை வேஷ்டி பட்டுக் கரையுடன் கூடியதை நீங்கள் உபயோகிக்கும் போது உங்கள் பொம்மை மிகவும் அழகாகத் தெரியும்.
- சில அலங்கார விளக்குகளையும் படிகளின் ஓரங்களில் நீங்கள் அமைக்கலாம்.
ஒன்பது நாட்கள் ஒன்பது தேவியர்
நவராத்திரி கொலு பொதுவாக ஒன்பது நாட்கள் வைக்க வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும் 4,5, 6வது நாட்கள் லட்சுமிக்கும் 7,8,9 சரஸ்வதிக்கும் உரிய நாளாகும். ஒவ்வொரு நாளும் தேவியை ஒவ்வொரு ரூபங்களில் அலங்கரித்து வழிபடலாம்.
- முதல்நாளில் மகேஸ்வரி தேவியாக மல்லிகை பூக்கள் கொண்டு வழிபடலாம்.
- இரண்டாம் நாள் கௌரி தேவியை துளசி அலங்காரம் செய்து வழிபடலாம்.
- மூன்றாம் நாள் வராஹி அம்மனை செண்பக மலர்கள் கொண்டு வழிபடலாம்.
- நான்காம் நாள் மகாலட்சுமியை மல்லிகை மலர்களால் அர்ச்சிக்கலாம்.
- ஐந்தாம் நாள் வைஷ்ணவி தேவி முல்லை மலர்களால் ஆறாம் நாள் இந்திராணி தேவியை ஜாதிமல்லி கொண்டு வழிபடலாம் தேங்காய் சாதம் நைவேத்தியம் படைக்கலாம்.
- ஏழாம் நாள் சரஸ்வதிதேவி தும்பை மலர்களால் வழிபடலாம்.
- எட்டாம் நாள் நரசிம்ம தேவி ரோஜா மலர்கள் கொண்டு அலங்கரிக்கலாம்.
- ஒன்பதாம் நாள் சாமுண்டி அல்லது அம்பிகை தாமரை மலர்களால் வழிபடலாம்.
ஒன்பது நாட்களும் கொலு வைக்க முடியவில்லை என்றால் மூன்று நாட்கள் அதாவது கடைசி மூன்று நாட்கள் கொலு வைத்து விஜயதசமி அன்று கொழுவை முடிக்கலாம்.
ஒன்பது படிகளில் என்னென்ன பொம்மைகளை அடுக்கலாம் ?
ஒன்பது படிகளில் என்னென்ன பொம்மைகளை அடுக்கலாம் என்பதற்கு இந்த தொல்காப்பியரின் வழிப்படி நீங்கள் செய்யலாம்.
ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடுசெவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே
(தொல்காப்பியம்மரபியல்)
ஓரறிவு: புல், மரம், கொடி, செடி ஈரறிவு: நத்தை, சங்கு மூவறிவு; எறும்பு நாலறிவு: நண்டு, தும்பி, வண்டு ஐந்தறிவு: விலங்கு, பறவை ஆறறிவு: மனிதர்
- முதல் படி:
- செடி கொடிகள் புல் மரம் பழங்கள் காய்கறிகள் பலசரக்கு , செட்டியார் பொம்மை வியாபாரிகள் போன்றவற்றை அடுக்கலாம்.
- இரண்டாம் படி
- சங்கு, சிப்பி, குழந்தைகள் சமையல் அறை சாமான்கள் போன்றவற்றை அடுக்கலாம்
- மூன்றாம் படி
- பாம்பு புற்று, நாக தேவதைகள், முயல் ஆமை கதைகள், காக்கை குடம் கூழாங்கல் கதை போன்றவற்றை அடுக்கலாம்
- நான்காம் படி – நண்டு தும்பி வண்டு
- இதில் நீங்கள் இந்த விலங்குகளோடு தொடர்புடைய சில கதை சம்பந்தப்பட்ட பொம்மைகளை வைக்கலாம் எடுத்துக்காட்டாக கர்ணன் மடியில் அவருடைய குரு தூங்கியபோது , கர்ணனின் தொடையில் வண்டு துளைத்தது. மலர் சம்பந்தப்பட்ட பொம்மைகள் காமதேனு வாஸ்து சம்பத்தப்பட்ட சிலைகள் போன்றவற்றை வைக்கலாம்.
- ஐந்தாம் படி – விலங்குகள் மற்றும் பறவைகள்
- இதில் நீங்கள் சில மோட்சம் அடைந்த புராண கதைகள் கதைகளில் வரும் விலங்குகள் பறவைகளை வைக்கலாம்.
- எடுத்துக்காட்டாக கஜேந்திர மோக்ஷம், ஜடாயு மோட்சம், நாரை வதம், கல்யாணம், சடங்கு, வளைகாப்பு, காவடி போன்ற பொம்மைகளை வைக்கலாம்.
- ஆறாம் படி
- வாழ்வில் உயர்ந்த மனிதர்கள் பற்றிய பொம்மைகளை வைக்கலாம். தலைவர்கள் சாதுக்கள் சித்தர்கள் சித்தர்கள் ராமானுஜர் சாய்பாபா இசை மும்மூர்த்திகள் போன்றோரின் சிலைகளை வைக்கலாம்.
- ஏழாம் படி
- ஆழ்வார்கள் நாயன்மார்கள் சாய்பாபா மத நல்லிணக்கத்திற்கு உதவிய புத்தர் போன்றோரின் சிலைகளை வைக்கலாம்.பக்தர்களின் வாழ்க்கைச் சித்திரங்களை வைக்கலாம். கண்ணப்ப நாயனார் வரலாறு.
- எட்டாம்படி
- கிராம தேவதைகள், மதுரை வீரன், குலதெய்வம் சுவாமிகள் (சிலர் குலதெய்வத்தை ஒன்பதாம் படியில் வைப்பார்கள்) மாரியம்மன், கருமாரியம்மன்.
- ஒன்பதாம் படி
- நவ துர்கை, அஷ்ட லட்சுமி , தசாவதாரம், கலசம் போன்றவற்றை அடுக்கலாம்.
கொலு வைக்க எவ்வளவு செலவாகும் ( கொலு பட்ஜெட்) ?
நவராத்திரி மூன்று படிகளில் நீங்கள் பொம்மைகள் நிரப்ப வேண்டும் என்றால்,
மூன்று படி ஸ்டீல் 1500 முதல் 2000 வரை ஆகும், அதில் நிரப்ப வேண்டிய பொம்மைகள்
- முதல் படிக்கு செட்டியார் செட்டியார் அம்மா பழங்கள் காய்கறிகள் மற்றும் நவதானியங்கள் மரம் விலங்குகள் சேர்த்து 1500 முதல் 2000 ஆகும்.
- இரண்டாம் படிக்கு கிராம தேவதைகள் சிறுசிறு புராண கதைகள் எடுத்துக்காட்டாக அம்மன் சாய்பாபா ராமானுஜர் ஆண்டான் அனுமான் – 2000 ரூபாய்
- மூன்றாம் படிக்கு அஷ்ட லஷ்மிகள் துர்க்கை தசாவதாரம் – ரூபாய். 3000-4000 வரை
- கலசம் பூஜை சாமான்கள் பரிசுப் பொருட்கள் 600 ரூபாய்
- மொத்தம் உங்களுக்கு ஒன்பது நாட்களுக்கு ஆகும் சுண்டல் மற்றும் நைவேத்திய செலவுகள் உட்பட குறைந்தபட்சம் 10000 முதல் 12,000 வரை செலவாகும்.
புதிதாக கொலு வைக்க தொடங்குபவர்கள் முதலில் சிறிய பொம்மைகளையும் ஏதாவது ஒரு பெரிய பொம்மைகளையும் வாங்கலாம். ஒவ்வொரு வருடமும் இதற்கென்று ரூபாய்2000 முதல் 3000 வரை சேர்த்து உங்கள் கொலு பொம்மைகளை அதிகரிக்கலாம்.
என்னென்ன கொலு பொம்மைகள் மிகவும் பிரசித்தம்?
- தசாவதாரம்
- அஷ்டலட்சுமி
- நவகிரகம்
- ஆண்டாள் ரங்கநாதர்
- அஷ்டலிங்கம்
- ஆழ்வார்கள் செட்
- கோவர்த்தன மலை தூக்கும் காட்சி
- மீனாட்சி திருக்கல்யாணம்
- முருகன் வள்ளி தெய்வானை
- அறுபடை வீடுகள்
- அத்திவரதர்
- ராவணன் தர்பார்
- மாய பஜார்
- பெண்கள் தண்ணீர் குடம் குழாய் செட்
- கனக தாரா
- வாலி வதம்
- ஆண்டாள் பிறப்பு
- கிருஷ்ணன் உறியில் இருந்து வெண்ணெய் திருடுதல்
- கீசக வதம்
- பிரதோஷம் செட்
- காளிங்கநர்த்தனம்
- இசை மும்மூர்த்திகள், ராமானுஜர், கருப்பணசாமி
- செட்டியார் செட்டியார் அம்மா பொம்மைகள்
- மரப்பாச்சி பொம்மை
- ராமாயண மகாபாரதக் காட்சிகள் எடுத்துக்காட்டாக குகன் ஓடம் ராமர் பட்டாபிஷேகம் அகலிகை சாபவிமோசனம் தசரத தர்பார் கும்பகர்ணன் உறக்கம் அரக்குமாளிகை பஞ்சபாண்டவர்.
- குபேர சபை கைலாயம் வைகுண்டம்
- தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
- கேரளா கதகளி பொம்மை
- பஜனை கோஷ்டி
- திருமணம், இலை விருந்து, சீமந்தம் அல்லது வளைகாப்பு, காதணி விழா காவடி
இந்த வருட புதுவரவுகள்
- மகாபலிபுரம் செட்
- காகிதத்தில் கல் போன்ற வடிவத்தில் உள்ள சிலைகள்
- அத்தி வரதர்
- அஷ்டலிங்கம்
- காஞ்சி திவ்யதேசங்கள்
- பிரம்மோற்சவம்
- நவதிருப்பதி
- அப்துல் கலாம்
நவராத்திரி சுண்டல் இனிப்பு வகைகள்?
இனிப்பு | சுண்டல் |
சர்க்கரைப் பொங்கல் | வேர்க்கடலை சுண்டல் |
ரவா கேசரி | புளியோதரை பாசி பயறு சுண்டல் |
ஜவ்வரிசி பாயசம் | பருப்பு வடை வெண் பொங்கல், வெள்ளை சுண்டல் |
கோதுமை இனிப்பு அப்பம் | காராமணி சுண்டல் மிளகு சாதம் |
அரிசி பாயசம் | சிவப்பு பீன்ஸ் சுண்டல் |
ரவா லட்டு | கதம்ப சாதம் பட்டாணி சுண்டல் |
பருப்பு பாயசம், அதிரசம் | தேங்காய் சாதம் |
தேங்காய் பர்பி | கொண்டை கடலை சுண்டல் |
பால் பாயசம் | எலுமிச்சை சாதம் |
நவகிரகங்களுக்கு உரிய தானியங்கள் அல்லது முளைப்பாரி:
- கோதுமை சூரியன்
- நெல் சந்திரன்
- துவரம் பருப்புசெவ்வாய்
- பாசிப்பயறு புதன்
- கடலைப்பருப்பு குரு அல்லது வியாழன்
- வெள்ளை சுண்டல் சுக்கிரன்
- எள்ளு சனீஸ்வரன்
- உளுந்து ராகு
- கொள்ளு கேது
நவராத்திரி ஐடியாக்கள்?!
- நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டும் நவராத்திரி பொம்மைகளை செய்யலாம்.
- நவராத்திரிக்கு 15 நாட்களுக்கு முன்பே சிறிய தொட்டிகளில் நவதானியங்களை முளைக்கச் செய்து முளைப்பாரி வைக்கலாம்.
- மயில் தொகை இருந்தால் முருகனுக்கு பின்னாலும் அல்லது மயில் போன்ற பறவையை களிமண்ணால் செய்து அதன் இறகுகளுக்குப் பதில் உண்மையான இறகுகளையும் காவடியும் நீங்கள் வைத்தால் மிக அழகாக இருக்கும்.
- நவதானியங்கள் சிறுசிறு துணிப்பைகளில் மூட்டை போல் செய்து வைக்கலாம்.
- குழந்தைகள் விளையாடும் கிச்சன் செட் இவற்றையும் நீங்கள் கொலுவில் வைக்கலாம்.
- அறிவியல் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை நீங்கள் கொலுவில் வைப்பதன் மூலம் குழந்தைகளுக்கு ஆர்வம் ஊட்டுவதாக இருக்கும். ஸ்பேஸ்கிராப்ட் டாக்டர் செட் சதுரங்க விளையாட்டு போன்றவற்றை வைக்கலாம்.
- யோகாசனம் பொம்மைகள் வைக்கலாம்.
- இரண்டு பக்கமும் வாழை மரங்கள் வைக்கலாம்.
- எங்கள் வீட்டில் கடந்த முறை நாங்கள் ஒரு சிறிய ஊஞ்சலில் வீட்டிலுள்ள சாஃப்ட் டாய்ஸ் பொம்மைகளையும் பொதுவாக வைத்திருந்தோம்.
- கொலுவில்கோயில் கோபுரம் அமைத்தல் முன்னர் குளம் அமைத்தல் அந்தக் குலத்தில் சிறுசிறு மீன்கள் காகித படகுகள் படகுகள் போன்றவற்றை செய்தல் கொழுவிற்குஅழகு தரும்.
- கொலுவில் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு வண்ணம் தில் பூக்கள் அலங்காரம் செய்யலாம்.
- சரஸ்வதிக்கு வெள்ளை மலர்களாலும் துர்க்கைக்கு சிவப்பு மலர்களாலும் லட்சுமிக்கும் மஞ்சள் மலர்களாலும் அலங்காரங்கள் செய்யலாம்.
- பொங்கல் பானைக்கு பஞ்சு போன்ற பொருட்களை உபயோகிக்கலாம்.
- உங்கள் குழந்தைகளின் மற்றும் கிராஃப்ட் ஆக்டிவிட்டி களை கொலுவில் தனியே ஒரு இடத்தில் வைத்து அதை மற்ற குழந்தைகளுக்கு காட்டலாம். உங்கள் குழந்தைக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும்.
- காய்கறி மற்றும் பழ வண்டி வியாபாரிகளுக்கு நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் காய்கறி பழங்களை உபயோகப்படுத்தி கொலு வைக்கலாம்.
- கூழாங்கற்கள் கடல் மணல்சிப்பிகள் கொண்டு கடற்கரை வடிவமைக்கலாம்.
- குழந்தைகளின் clay வைத்துகாய்கறிகள் பழங்கள் ஸ்வீட் போன்ற சிறிய வடிவங்கள் செய்து அதற்கு பக்கத்தில் ஒரு ஆண் பொம்மையோ பெண் பொம்மையை வைத்து வியாபாரி கடை உள்ளது போல் செய்யலாம்.சிறிய சிறிய அட்டைப் பெட்டிகள் உருவாக்கி அதில் இவற்றை அடுக்கலாம்.
- கொலுவிற்கு பின்புறம் மலர் அல்லது இலை தோரணம் அழகாக இருக்கும்.
- பொங்கல் செட் பானை வைக்கோல் வீட்டில் உள்ள பசு போன்ற பொம்மைகளை வைத்து இதைச் செய்யலாம்.
- கார்ட்போர்ட் (Card Board Sheet or Thermacol) சீட் கொண்டும் சில கோயில் வளைவுகள் அமைக்கலாம்.
- வீடு செய்து அதற்கு முன் சிறிய துளசிமாடம் கோலம் இடலாம்.
நவராத்ரி விளையாட்டுகள் – போட்டிகள்
- சிறுவர்களைக் கவரும் விதமாக கிரிக்கெட்செட், சோட்டா பீம், காக்கை நீர் எடுத்த கதை முயல் ஆமை கதை போன்ற பொம்மைகளை அடுக்கலாம். ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய போட்டிகள் ஏற்பாடு செய்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறிய பரிசுகளை கொடுக்கலாம்.
- ஒருநாள் பாட்டுப்போட்டி ஒருநாள் நடனப்போட்டி ஒரு நாள் மனக்கணக்கு ஒரு நாள் அதிகம் யார் மூச்சு பிடிக்கிறார்களோ ஒருநாள் யார் அதிக ஸ்லோகங்களைச் சொல்கிறார்களோ ஒரு நாள் வினாடி வினா போன்ற போட்டிகளைவைத்து குழந்தைகளுக்கு பரிசளிக்கலாம். சதுரங்க விளையாட்டுக்கள் பல்லாங்குழி பகடைக்காய்கள் பொருத்துதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
- குழந்தைகளுக்கான ரங்கோலி போட்டிகள் வைக்கலாம்.
- ஒவ்வொரு குழந்தையையும் ஒரு பொம்மை செய்து வர சொல்லலாம்
- குழந்தைகளை ஒவ்வொரு அலங்காரத்தில் ஒவ்வொரு நாளும் வரச் செய்யலாம்.
- அவர்களுக்கு வைத்துள்ள பொம்மைகளை பற்றிய கதைகளை கூறலாம். ராமாயணம் மகாபாரதம் மட்டுமின்றி அவர்களை பற்றியும் நாயன்மார்களை பற்றியும் திருவள்ளுவர் அவ்வையார் போன்ற சிலைகளை பற்றியும் நீங்கள் அவர்களுக்கு எடுத்துக் கூறலாம்.
இந்த வருடம் குரானா பாதிப்பால் இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்றி குழந்தைகளை இதில் பங்கேற்க செய்யலாம்.
நவராத்திரியின் போது என்ன செய்ய வேண்டும் ?
- வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் மஞ்சள் மற்றும் புது துணி போன்றவற்றை முடிந்தால் கொடுக்கலாம்.
- ஒவ்வொரு நாளும் பூஜைகள் செய்து ஒவ்வொரு வகையான சுண்டல் மற்றும் இனிப்பு வகைகளை இறைவனுக்கு படைக்க வேண்டும்.
- குத்துவிளக்கு அகல்விளக்கு இரண்டையும்வீட்டில் ஏற்றலாம்.
- சிலர் காலையும் மாலையும் தீபமேற்றி கற்பூர ஆரத்தி காட்டுவார்கள்.
- சில வீடுகளில் கலசத்திற்கு அருகில் அகல்விளக்கை ஒன்பது நாட்களும் அணையா விளக்காக வைத்து வழிபாடும் செய்வார்கள்.
- காலையிலும் மாலையிலும் தெய்வ வழிபாட்டில் ஈடுபடலாம் .
- குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்யலாம்
- நல்ல எண்ணங்களை சிந்தித்து நல்ல செயல்களில் ஈடுபடவேண்டும்
நவராத்திரியை எப்படி முடிப்பது ?
நவராத்திரி முடிந்தவுடன் அந்த தசமி அன்று கொலு பொம்மைகளை சம்பிரதாயத்துக்காக படுக்கை வாக்கில் வைத்து திரும்ப பேப்பர் பைகள் முதலியவற்றை சுற்றி பெட்டிகளில் வைத்துவிடலாம். அல்லது அடுத்த நாளில் கொலு பொம்மைகளை பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கலாம்.
பொதுவாக நவராத்திரி வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் முடியும்போது அந்த நேரத்தில் பொம்மைகளை எடுக்கமாட்டார்கள் அடுத்த நாள்தான் எடுப்பார்கள்.
கொலுவில் வைத்த பொம்மைகளை பூஜை அறையில் வைத்து பூசித்து இல்லை.
கொலுவில் மண் பொம்மைகள் தான் வைக்க வேண்டுமா ?
கொலுவில் பெரும்பாலும் மண் பொம்மைகளை வைக்கப்படுகின்றன. ஆனால் தற்போது பேப்பர் மாஸ் என்று காகித பொம்மைகளும்,
சென்னப் பட்டணம் கொண்டபள்ளி மர பொம்மைகள், மற்றும் சில துணி பொம்மைகளும், தாமிரம் பித்தளை வெண்கலம் உள்ளிட்ட சிலைகளும் கொலுவில் வைக்கிறார்கள்.
கொலு பொம்மை செய்வது அழகிய வர்ணங்கள் பூசுவது என்பது பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை வருடாவருடம் தருவதால் மண் பொம்மைகளை நீங்கள் வாங்கி வையுங்கள்.
காகித பொம்மைகள் லேசான தாகவும் பராமரித்த எளிதாகவும் இருப்பதால் முக மற்றும் அலங்கார வேலைப்பாடுகள் எளிதாக செய்ய முடியும் தற்போது அதிகம் விற்பனையாகின்றன.
தற்போது கொலுவில்சில வாஸ்து பொம்மைகளையும் சீன பொம்மைகளையும் வைக்கிறார்கள்.
கொலு பொம்மைகளை எங்கு வாங்குவது ?
நிறைய ஆன்லைன் கொலு பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன
மயிலாப்பூர் நங்கநல்லூர் போன்ற இடங்களில் தெருக்களிலும் நிறைய கொலு பொம்மைகள் விற்பனையாகின்றன.
கொலு பொம்மைகளை எவ்வாறு பராமரிப்பது ?
கொலு முடிந்தவுடன் கொலு பொம்மைகளை நன்றாக துடைத்து பேப்பர் சுற்றி வைக்க வேண்டும்.
ஒரு பெட்டியில் சுற்றப்பட்ட பொம்மைகளுக்கு நடுவில் வைத்து அல்லது bubble wrap செய்து வைக்கலாம். அண்டு உருண்டைகளையும் அட்டைப் பெட்டிகளில் போட்டு வைக்கலாம். அட்டைப் பெட்டிகள் உயரத்தில் ஈரம் படாமல் அடுத்த வருடம் வரைக்கும் இருக்க வேண்டும். அட்டைப் பெட்டிகளை அடுத்த வருடம் பிரித்தவுடன் முடிந்தால் பொம்மைகளை சிறிது நேரம் சூரிய ஒளியில் வைக்கலாம்.
உடைந்து விட்ட பொம்மைகளை பயன்படுத்தலாமா ?
உடைந்து விட்ட பொம்மைகளை மூக்கு கை கால் ஊனமுற்ற பொம்மைகளை கொலுவில் வைக்கக்கூடாது.
சிறிய அளவில் சேதம் அடைந்திருந்தால் குழந்தைகள் விளையாடும் clay வைத்து சரி செய்து வர்ணம் பூசி நீங்கள் அதை உங்கள் ஷோகேஸில் உபயோகப்படுத்தலாம்.
அனைவருக்கும் நவராத்ரி நல்வாழ்த்துக்கள் !!!
உங்கள் வீட்டில் அனைத்து வளங்களும் வந்து சேரட்டும் !!!